எங்களின் இரவுகள் விடியாதா…


விடியாதா… விடியாதா… எங்களின் இரவுகள் விடியாதா…
வேசங்கள் இல்லை எங்களின் நெஞ்சத்தில் மஞ்சத்தில்
வேதனை எங்களின் சொந்தங்கள் கொண்டிடும் பந்தங்கள்…
வேதங்களே சொல்லுங்கள் வாழ்க்கைக்கு வழி சொல்லுங்கள்…

சாலையோர மரத்தின் நிழலே எங்களின் வீடுகள்
சாதங்கள் முழுதாய் நிறைத்ததில்லை எங்களின் வயிருகள்
சந்தங்கள் எப்போதும் இருந்ததில்லை எங்களின் வாழ்க்கையில்
சதிகள்நிறைந்த உலகத்தில் விதியா எங்கள் வாழ்க்கை…

நிறைவாய்தானே உழைக்கின்றோம் குறைவாய் ஊதியமேன் பெறுகின்றோம்
நீதியெங்களை தொடாததேனோ நிம்மதியை வாழ்வில் தராததேனோ..
நித்திய வாழ்வில் தினம் தினம் மரணம்தான்
நினைவுகள் மட்டும் வாழுது நடை பிணமாய்…

வீடுகள் எம்முழைப்பில் தினமுயர்ந்து கோபுரத்தை விஞ்சும்
வீதியின் ஓரங்கள் தானனெனினும் தந்திடும் தஞ்சம்
விதியா…இதுவிதியா…விஞ்சிடுதே எங்களில் பஞ்சம்
விதியே காட்டாயோ எங்கள்மேல் கருணை கொஞ்சம்

ஆட்சிகள் மாறி அரசுகள் மாறிட்ட போதும்
அன்பாய் இதுவரை எம்மிடம் வந்தவரில்லை எவரும்
அரைவயிறு கஞ்சிக்கு ஏழைக்கு வழிசெய்யாத பேதம்
அரசுகள் ஆட்சிகள் இங்கே இருந்தென்ன லாபம்.

நிலைமைகள் இனி ஒருநாள் வலிந்தே மாறும்
நிலையாய் எங்களின் வாழ்வு அப்போது உயரும்
நிலைகெட்ட அரசியல் தலைகள் அப்போதெங்கே போகும்
நீதியின் கண்கள் உலகில் எப்போதுமா தூங்கும்.
* * *