கானல் நீராகிப்போனதோ கனவுகள்…


கானல் நீராகிப்போனதோ கனவுகள்
காதலர் கண்களில் ஏனிந்த அதிர்வுகள்
காலம் சொல்லும் பாடங்கள்
காயம்பட்ட பின்தான் வேதங்கள்….

மலையின் சாரல்தான் நதியின் வெள்ளங்கள்
மனதின் சாரல்தான் கவியின் துள்ளல்கள்
மரத்தின் சாரம்தான் கனியின் சுவையாகும்
மதியின் சாரம்தான் மயக்கும் பேச்சாகும்…

விதிசெய்யும் மாயம் மனிதத்தின் பயமாகும்
விதைசெய்யும் மாயம் வளர்ந்து மரமாகும்
வினைசெய்யும் மாயம் தீய விளைவாகும்
விடைதெரியா விடுகதையோ மனதில் புதிராகும்…

புன்னகைப் பூவும் சிலநேரம் புதிராகும்
புதிர்கூட பலநேரம் புன்னகையாய் மாறும்
புரியாதபோது புன்னகையும் புதிரும் தடம்மாறும்
புரிந்துகொண்டால் மனமெங்கும் பூக்கள் மலரும்…

கானல் நீரும் கனவுப்பூவும் ஒன்றல்ல
கனவின் அலைகள் ஒருநாள் நினைவாகும்
கலைந்து போகாமல் வாழ்வில் நனவாகும்
காலத்தில் அழியாத காவிய கவியாகும்…

காதலின் மொட்டுக்கள் விரிந்து மலராகும்
காதலர் உள்ளத்தில் இனிய நினைவாகும்
காதல் உள்ளம் எப்போதும் சிறகாகும்
காதல்வானில் பறந்து இன்பத்துதி பாடும்…

காதல் நெஞ்சே பிறகெப்படி – உன்
காதல் கனவுகள் கானல்நீராய் மாறும்…
கலங்காதே கலையாதே காதல் நெஞ்சே…
காலம்கூட உன்னால்தான் வாழுமென்பதை மறவாதே….
* * *