பேனா.(ஹைகூ)

சிந்தும் கண்ணீர் சரித்திரமாய்…
தலைகீழ் கவிழ்த்த போதும் கவலையின்றி,
எழுதிச்செல்லும் பேனா.

உருட்ட உருட்ட சழைக்காது;
உருளும் இடமெங்கும் தடம் பதிக்கும்;
குண்டுமுனைப் பேனா.

வித்தைக்காரன் போலும்
நேர்நிற்கையில் சோம்பி தூங்குகின்றான்
பேனா.

இரத்தம்சிந்தி யுத்தம் செய்கின்றான்;
தற்கொலைப் படையாய் இருப்பானோ?!…
பேனா.

உற்ற நண்பன் அவன்
கைகளில் விளையாடி நெஞ்சோடு துயில்வான்;
சட்டைப்பையில் பேனா.

ஃஃஃ

கூரை ஓலை…(ஹைகூ)

புதுக் குறுத்தோலை வந்தது
பழைய மட்டை உதிர்ந்து விழுந்தது
வளரும் முதிர்ச்சி.

காவோலைக்கு கையாட்டியது பச்சைவோலை;
கவலைப்பட்டு இருக்குமோ?!…
நெருங்கும் நாட்களை நினைந்து.

சலசலத்து சண்டையிட்டது ஓலை
குறைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் தங்களுக்குள்
தழுவும்காற்று யாருக்கு சொந்தமென்று.

சந்தோசமாய் சம்மணமிட்டு அமர்ந்தது
உதிர்ந்த பின்னும் உயரத்திலென்று
காய்ந்த கூரை ஓலை.

கத்தியால் அறுத்து விட்டான்
கண்ணீர் வடித்தது இனிப்பாக;
பதனீர்.

ஃஃஃ

மலை வெள்ளம்.

உயிர்ப்பயத்தில் ஒதுங்கினேன்
உருளும் பாறையில் எந்தப்பாறை எமனோ?…
மலை வெள்ளம்.

ஆடுவிட்டு மேய்த்தனர் செடியில்,
புதுத்தளிர் விட்டு வளரவேண்டுமாம்!…
எதிர் வினை.

எல்லாம் மாறிப்போனது…
குரங்கு விரட்டப் போனான்,
அவனும் மரத்தில்.

இறைவனுக்கும் ஆசையா?.
போன்சாய் வளர்க்க!…
குள்ள மனிதர்கள்.

நேற்று உடன்பிறப்பு
இன்று பகைவன்
பாகப்பிரிவினை.

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

மின்னல்.

வெண்பஞ்சுக்களின் உரசல்
பற்றி ஒளிர்ந்தது வானம்,
மின்னல்.

சத்தம் காதைக்கிழிக்கின்றது;
மேகக்காதலர்க்குள் என்ன ஊடலோ?!…
இடியோசை.

உருமாறிச் செல்கின்றது,
தடுக்க சட்டமில்லையோ?…
நீராவி.

பிரிந்தவர் சேர்ந்தால் இன்பம்தான்,
மேகம் சிந்தும் ஆனந்தக்கண்ணீர்
மழைத் தூறல்.

ஊடலில் அழுகின்றது!..
காற்றோடு மேகத்திற்கென்ன பிணக்கு?
கொட்டும் மழை.

ஃஃஃ

புரியாத நிலையில்…

மௌனம்…
எங்கும் மௌனம்;
மலையைப் பார்க்கின்றேன்,
அங்கும் மௌனம்;
கற்களில் அசைவில்லை
காட்சிகளில் மாற்றமில்லை…
மௌனம்!…எங்கும் மௌனம்!!…

வானத்தை நோக்குகின்றேன்
வட்ட நிலா,
சுற்றி வளையவரும் நட்சத்திரங்கள்
நிலா முகத்தை
வருடிச்செல்லும் மேகக்கூட்டம்,
அமைதி!…எங்கும் அமைதி!!…

என்னைப் பார்க்கின்றேன்
என்னில் எத்தனை வளர்ச்சி
மனதினில் எத்தனை கிளர்ச்சி
மனதை வாட்டும் தளர்ச்சி…
தினம் தினம் வாழ்க்கையில்
புதுப்புது சுழற்சி…

காரணம் புரியவில்லை,
சிந்திக்க சிந்திக்க,
சிந்தனைக்கோ முடிவில்லை…

அமைதியாய் அமர்கின்றேன் சுரத்தின்றி..
என் மௌன
மணித்துளிகள் மரணிக்கின்றன…
இப்போதும்
ஏதும் புரியவில்லை…

ஓ மானிடத்தில்
எத்தனை மகிமை
அதுவும் புரியாத நிலையில்…

ஃஃஃ

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

தானாடாவிட்டாலும் சதையாடும் – ஹைகூ

வலியை இப்போது தான் உணர்கின்றேன்
அதற்கும் இப்படித்தான் வலித்திருக்குமோ?… நெஞ்சில் தைத்தது,
சிறுவயதில் அம்பெய்திய கோழிக்குஞ்சின் ஞாபகம்.

மகத்துவமானது நட்பு
வரைமுறையில்லாத வானம் அது
எருமை முதுகில் கருங்குருவி.

உயிர்களனைத்தும் பேணிவளர்க்க வேண்டும்
கோழியின் பசிக்கு உணவிட்டுக்கொண்டிருந்தேன்
என்றாகிலும் உணவாகுமோ?!…

மண்ணில் உழைத்து தேய்வது ஓரினம்
வெட்கமின்றி பலனை அனுபவித்து சந்தோசிக்கும் வேறினம்
குயிலின் முட்டைக்கு அடைகாக்கும் காகம்.

தானாடாவிட்டாலும் சதையாடும் என்பதுண்மை
தனதென்றால் கோழைக்கும் வீரம் வருவதுண்டு
பருந்தை தாக்கும் கோழி.

ஃஃஃ

சோம்பேரிச் சூரியன்…ஹைகூ

சோம்பேரியாய் தூங்குகின்றதே!…
அழிந்து போகப்போவதை அறியாதோ?…
புல்லின் நுனிதூங்கும் பனித்துளி.

தென்றலுக்கும் துவேசம் இருக்கவே செய்கின்றது
வியர்வைத் துளிகளை வீசியெறிந்து சென்றிருக்கின்றது…
புல்லின் நுனியில் பனிநீர்த் திவலைகள்.

இரவுப் பெண்ணவள் கொடுத்த முத்தத்தின் ஈரமோ…
விடிந்த பின்னும் பொக்கிசமாய் இதழ்மேல் பாதுகாக்கின்றதே…
பாந்தமாய் ரோஜா இதழமர்ந்த பனித்துளி.

சோம்பேரிச் சூரியன்!…
வெண்போர்வையை இன்னும் சுருட்டவில்லை…
பனிபடர்ந்த சாலை.

வானம் பன்னீர் தூவிக்கொண்டுருக்கின்றது…
எந்த உலகத்து வேந்தனுக்கு திருமணமென்று தெரியவில்லை!…
தரையிரங்கும் பனித் திவலைகள்.

ஃஃஃ

புதுச் சட்டை…ஹைகூ.

புதுச் சட்டை அணிவது சந்தோசமே…
யார் கொடுத்தார் காசு, புதுச்சட்டை வாங்க…
பழைய தோலுதிர்க்கும் பாம்பு.

பிண்டமிட பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்
நம் உணவையும் சுவைத்துப் பார்க்கட்டும்
சமையலாவதற்கு முன் மீன்களும்.

தேனாய் காதில் ஒலித்தது இனிய ஓசை
யார் கற்றுக் கொடுத்திருப்பார் சுரங்களின் வரிசையை…
அதிகாலை துயிலெழுப்பும் தென்னைமர குயில்.

தனியாபோகாதே திருடங்க அதிகம் அம்மா எச்சரித்தார்
மணி கூடவர்ரான் பத்து பேருக்கு சமம் என்றேன்
நன்றியோடு காலால் வருடியது என்வீட்டு நாய்.

அன்னமிடுவது புண்ணியம் ஆகும்
என் வாயோடு வாய்வைத்து உணவுண்ணும்
தாயால் கைவிடப்பட்ட புறாக்குஞ்சு..

ஃஃஃ

தாய்மொழி பேசு…

குயில்கள் இரண்டு சந்திக்கையில் குக்கூவென்று கூவக்கேட்டேன்
காகம் இரண்டு சந்திக்கையில் காக்காவென்று கரையக்கேட்டேன்
எந்நாளும் அவை இந்நிலை மாறாதிருக்கக் கண்டேன்
எத்தேசம் சென்றிடினும் எந்நாளும் இதையே கண்டேன்.

நீமட்டும் உன்னியல்பு எங்கனம் மறந்தாய் தமிழா?!…
தாய் மொழியை துச்சமென்றா துறந்தாய் தமிழா?!…
சென்னையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹவ் ஆர் யூ”, என்றாய்
மும்பையிலே இருதமிழன் சந்தித்தால் “ஹைசே ஹை”, என்றாய்.

தாய் மொழி பேசுவது தவறென்றா நினைத்தாய்?…
உன் தாய்க்கே இழிநிலையை ஏன் கொடுத்தாய்?…
இரவல் சட்டை அணிவதை பெருமையென்றா நினைத்தாய்
கந்தலானாலும் சொந்தச்சட்டை பெருமை யென்பதெப்படி மறந்தாய்.

உப்பிட்டாரை மறப்பதுவே தவறென்று எண்ணும் போது
உயிராய் உணர்வுதந்த தாய்மொழி மறப்பது சூது
உணர்வின்றி உயிர் இருப்பதில் என்ன மேன்மை
உணராது தாய்மொழி மறந்திட்டால், தமிழாநீ பொய்மை.

ஃஃஃ
இவன்: மா. கலை அரசன்.

ஹைகூ – ஆறு

வானக் காதலனுக்காய்
மழைக்காதலி எழுதிய கவிதை
வானவில்.

தன்னிறைவு பெற்றவர்கள்
மின் உற்பத்தியில்,
மின்மினிப் பூச்சிகள்.


உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.

பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.

புகைந்து அழியும் போதும்
அஸ்திவாரமிட்டுச் செல்கிறது அழிவிற்கு,
சிகரெட்.

உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி

ஃஃஃ

posted at காணியாறு on 30.08.2006
By மா.கலை அரசன்.

Newer entries »