பரத்தையர்.

அவளொரு வேடந்தாங்கல்
வந்தவரெல்லாம் பறவைகளாய்
தங்கிச் செல்வதால்.

அவளொரு சுமைதாங்கி
கடந்து செல்வோரெல்லாம்
பாரத்தை இறக்கிவைப்பதால்.

அவளொரு தடாகம்
தாகப்பறவைகளாய் ஆண்கள்
காமம் தணித்து செல்வதால்

அவளொரு பாலைநிலம்
பரிவென்ற தென்றல்
வாழ்வில் வருடிச்செல்லாததால்.

அவளொரு பனிப்பிரதேசம்
வசந்தத்தின் தளிர்கள்
வாழ்வில் துளிர்க்காததால்.

அவளொரு இலையுதிர் காலம்
உற்றார் உறவினர் உதரித்தள்ளி
ஒற்றைக் கொம்பாய் நிற்பதால்.

அவளொரு மத்தளம்
வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும்
துயரத்தின் அடிகளை தாங்குவதால்.

அவளொரு கந்தல்துணி
தவறை யார்செய்த போதிலும்
முள்ளில்விழுந்த துணியாய் பாதிப்படைவதால்.

அவளொரு மிதியடி
பயன்படுத்தி பின்
தூக்கி யெரியப்படுவதால்.

அவளும் ஓர்
உயிருள்ள உணர்வுகளுள்ள பெண்
எப்போதிதை நாமுணர்ந்து மதிப்பது?!…

ஃஃஃ

பெண்ணென்று பூமியில் பிறந்தோம்…

பெண்ணென்று பூமியில் பிறந்தோம் – மிகு
புண்பட்டு புழுவாய் துயரில் துடிக்கின்றோம்

பிறப்பொன்றாய் மண் மீதில் உதித்தோம்
பின்னேன் தாழ்வுற்று தனித்தீவாய் தவிக்கின்றோம்

உயிர் ஒன்றாய் இருந்த போதும்
உடற்கூறால் கீழென்றாகி குறுகித் தவிக்கின்றோம்

தாயென்றும் தெய்வமென்றும் சீர்பெற்று சிறந்தோம்
தரணி வாழ்வில் எவ்வகையில் தாழ்ந்தோம்

பிறந்த இடத்திலும் புறந்தள்ளி தவிப்பு
பிறத்தி யாரிடத்தும் சொல்லொண்னா முறைப்பு

நித்தமும் செத்து செத்து பிறப்பு
நித்திய வாழ்வில் ஏனிந்த பரிதவிப்பு

நீதியற்ற செயல்கள் ஒழித்திட விழித்திடுவோம்
நிகர்தான் நாமென்று இனி உரைத்திடுவோம்

நடுங்கி அஞ்சும் நிலையை அகற்றிடுவோம்
நடை பிணங்களல்ல நாங்களென்று உயர்ந்திடுவோம்

நம்மினமே நமை தாழ்த்தாமல் தடுத்திடுவோம்
நயவஞ்சகரை இனம்பிரித்து வேர றுத்திடுவோம்

நெஞ்சத்தில் நேர்நின்று நடந்திடுவோம்
நாளைய உலகம் நாமென்று உணர்த்திடுவோம்.

ஃஃஃ