மீண்டும் ஒரு தீபாவளி

நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களில் மீண்டும் ஒரு தீபாவளி
அகந்தை அழிந்ததின் அடையாளமாய் நாமெல்லாம் கொண்டாடிடும் தீபாவளி
மகிழ்ந்தே இந்தியரெல்லாம் நாடெங்கும் ஒன்றாய் கொண்டாடிடும் தீபாவளி
தகர்ந்தே போகட்டும் நமைவாட்டும் துன்ப மெல்லாம் இத்தீபாவளி

நரகதுயரில் மக்களை தள்ளிய நரகாசுரன் அழிந்ததால் இத்தீபாவளி
வரம்பல இறைவன்தர தீபமேற்றி பூஜிக்கும் நன்னாள் இத்தீபாவளி
சுரமாய் சந்தோசம் ஒருமித்து எல்லோர்க்கும் தரும் தீபாவளி
சிரம்முதல் அடிவரை எண்ணெய் தேய்த்து குளிப்போம் இத்தீபாவளி

அரக்கன் அழித்து பயத்தை கழைந்ததால் வந்தது இத்தீபாவளி
இரக்கம் மனதில்கொண்டே வாழ்வில் சிறக்க சபதமேற்போம் இத்தீபாவளி
பரணில் ஏற்றி வைப்போம் வீண் பயத்தை இத்தீபாவளி
தரணியெங்கும் புத்தாடை தரித்து பவனி வருவோம் இத்தீபாவளி

தீபஒளியேற்றி தீர்ந்தது அரக்கன் தொல்லையென்று கொண்டாடிடும் தீபாவளி
சாபமாய் வளர்ந்துநிற்கும் சாதி கொடுமைக்கு தீவைப்போம் இத்தீபாவளி
அபத்தமான மூடப் பழக்கங்களை தீயிலிட்டு தீபமேற்றுவோம் இத்தீபாவளி
உபயம்செய்தே இன்னல் தீர்த்து ஏழைவாழ்வில் தீபமேற்றுவோம் இத்தீபாவளி

அரக்கன்தந்த துன்பம் தீர்ந்ததென்று வெடியிட்டு கொண்டாடிடும் தீபாவளி
இரக்கமற்ற கொடியவர் வெடிவைத்து மக்கள் உயிர்குடிக்கும் நிலையறுத்து
கரங்கள் கோர்த்து கொடியோரின் வேரருக்க வெடிவைப்போம் இத்தீபாவளி
தரணியெங்கும் துஷ்டர்கள் ஒளிக்க சபதமேற்று கொண்டாடுவோம் இத்தீபாவளி.

ஃஃஃ

(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

தீபாவளி

தீபாவளி

கடைகள் பல ஆய்ந்து
புத்தாடை எடுத்தாச்சு…

மளிகை பலவகையும்
பலகாரம் செய்ய வாங்கியாச்சு…

சிவகாசி பட்டாசும்
வகைக்கொன்றாய் வாங்கி நிறைச்சாச்சு…

ஆனாலும்,
தீபாவளி நன்நாளில்
என்றோ இறந்த நரகாசுரனை நினைந்து
சந்தோசித்து புத்தாடை தரித்து
வாய் ருசிக்க பலகாரவகை உண்டு
வெடிவெடித்து மகிழ்வதா?…

தினம் தினம் வெடிவைத்து
ஏதுமறியா அப்பாவிகள் உயிர்குடிக்கும்
பாவிகள் செயல்கண்டு துடிப்பதா?…

மனசெங்கும் ஏக்கங்கள் நிறைஞ்சாச்சு
ஏதுமறியா பேதையைப்போல்
எம்மனசும் திகைச்சுப்போய் நின்னாச்சு.

ஃஃஃ
(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)