மனம்

மனது

புயல் இல்லாத போதும்
திசையறியாது பறந்து கொண்டிருக்கின்றது…
கட்டுக்கடங்கா மனது.

கரைசேர்ந்திருக்குமோ கட்டுமரம்?
துடுப்பெய்த துணிந்திருந்தால்!…
துவண்ட மனம்.

காற்றிலலைந்து சலசலத்தது;
காய்ந்த பனையோலையாய்…
பயந்த மனது.

நினைத்ததெல்லாம் இனித்தது
வானவில்லாய் மறைந்தது
கற்பனை மனது.

மழையில் குடைபிடித்தது
நீரின் போக்கில் துடுப்பிட்டது
பண்பட்ட மனது.
<<>>

இலவசம்

தொட்டியில் விழும் எச்சில்இலைக்காக ஏங்கிநிற்கும்
ஐந்தறிவு ஜீவன் போல தெரிகின்றது;
இலவசங்களுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம்.

கண்கள் – ஹைகூ

வலைகளில் விழுவதற்கு மட்டுமல்ல
வலைவீசவும் தெரியும் மீன்களுக்கு!…
பெண்களின் கண்கள்.

ஃஃஃ

தலைமுடி

சிலர் பரம்பரை என்றனர்
சிலர் அறிவுஜீவிகளின் அடையாளமென்றனர்
பளிச்சிடும் வழுக்கைத்தலை.

*

கர்வமாய் ஒட்டிக்கொண்டது சாயம்;
உன்கர்வம் எத்தனை நாளோ?…
கருவியது தலைமுடி.

*

நொடிக்கொருமுறை கோதலும் சீவலும்
வாசனைஎண்ணெய் தடவி பராமரிப்பும்;
முடி உதிரும்வரை.

*

அதிர்ச்சியாய் தான் இருக்கின்றது,
இளமைமுறுக்கிற்கு விழுந்த பேரிடியோ?…
எட்டிப்பார்க்கும் இளம் நரை.

*

யோசித்துப்பார்க்க நகைப்பாய் வந்தது…
மீண்டும் வளராமலிருந்தால் கொடுப்போமா?…
காணிக்கையாய் முடியை.

* * *

ஏழையின் கனவு. – ஹைகூ

கோடி நட்சத்திரம் கண்களில் மலர்ந்தது
காட்சியை இரசிக்கத்தான் மனமில்லை
சுவரில் மோதியவலி பின்தலையில்.

*

கண்களில் தெரிந்தது நீரின் காட்சி
தாகம் தணிக்குமா கானல் நீர்?
ஏழையின் கனவு.

*

வாழ்வின் சந்தோசமான தருணங்கள்;
ஏழை நினைப்பதும் நடக்கின்றது
கலைத்துவிடாதீர் தூக்கத்தை!.

*

அருகில் தெரிந்தது தொடுவானம்!…
தொட்டுவிட தொடர்ந்தே நடந்தேன்…
தொடர்கதையானது ஏழ்மையைப்போல.

*

வானம் பொய்த்துவிட்டது…
யாருக்கு இங்கே புரியும்?…
உதிரும் இலையின் வலி.

* * *

அப்பாவின் வியர்வை வாசம்

அப்பாவின் வியர்வை வாசம் ஞாபகத்தில்;
எங்கோ மழை பெய்திருக்க வேண்டும்
நாசியை வருடும் மண்மணம்.

குளக்கரையோரம் எழும்சத்தம் காதைக் கிழிக்கும்;
சத்தமிட்டு சந்தோசிக்கும் தவளைகள்
வானில் கருமேகங்களின் சஞ்சாரம்.

தெருவில் உல்லாசமாய் மழைத்துளியேந்தும் சிறுவன்;
மாடிவிட்டினுள் கான்கிரீட் கூரையை வெரிக்கின்றேன்
ஞாபகச்சிறையில் ஒழுகும் கீற்றுக்கூரை.

பார்வையாளனுக்கும் மரியாதை கிடைக்கின்றது;
ஜன்னலோரம் தூவிச்செல்லும் பன்னீர்த்திவலைகளை,
வீதியிலிரங்கி நர்த்தனமாடும் மழை.

கோடைக்கால குளியல் எல்லோருக்கும் பிடிக்கும்
ஈரம் துவட்ட மனமில்லையோ?!…
வழியும் நீர்த்திவலையோடு செடிகள்.

ஃஃஃ

தூக்கணாங்குருவி கூடு…

வீடு கட்ட மரம் வெட்டினார்
வேறுமரம் தேடி பறந்தது பறவை
கூடு கட்டி குடியிருக்க.

அனாதையாக தெருவில், உதிர்ந்த முடிகள்;
தத்தெடுத்துக் கொண்டன பறவைகள்
மெத்தையாய் கூடுகளில்.

எதிர்பார்ப்பில்லாத தாய்மை உணர்வு
அலகோடு அலகுவைத்து உணவூட்டியது பறவை
கூடுவிட்டு என்று பறக்குமோ குஞ்சு.

சேமிப்பை கற்றறியவில்லை இன்னும்
மழைநேரம் இரைதேடி தவிப்போடு
பறக்கும் குருவி.

இது சாத்தியமில்லாதது!….
எந்தக்கல்லூரியில் பொறியியல் பயின்றது?…
தொங்கும் தூக்கணாங்குருவி கூடு.

ஃஃஃ

மழை நீர்(ஹைகூ)

சின்னச் சின்னக் குளங்கள்
சந்தோசமாய்க் குளிக்கும் சிட்டுக்குருவிகள்
சாலைக்குழிகளில் தேங்கும் மழைநீர்.

தூக்கம்கலைந்த சோகமான இரவுகள்
இனிமையாய் தரையில் ஜலதரங்கம் வாசித்தது,
பொத்தலில் வழிந்த மழைநீர்.

இயற்கையின் இன்னிசைக் கச்சேரி
இசையமைக்கக் கற்றுத்தந்தது யார்?…
குளத்தில் பட்டுத்தெரிக்கும் மழைநீர்.

வானம்பார்த்து ஏரோட்டும் கோடைகாலம்
நம்பிக்கையின் ஆசிர்வாதமாய் அமிர்தமாய் ருசித்தது
உதட்டில் விழுந்த ஒருதுளி மழைநீர்.

வழிமேல் விழிவைத்து காத்திருந்தது;
சிந்தும் துளிகளில் எந்தத்துளி முத்தாகுமோ?…
மழைநீரை எதிர்நோக்கும் சிப்பி.

ஃஃஃ

வாகனம்-பிரசவத்திற்கு இலவசம் (ஹைகூ)

சாலையில் மிதந்துசென்றது சுமையுந்து (லாரி)
ஓட்டுநரும் மிதந்துகொண்டுதான் இருந்தார்;
மிதக்கவைக்கும் உற்சாகப்பானம்.

உயிர்பயம் ஒட்டிக்கொண்டது
பின்னால் வந்துகொண்டிருந்தது சுமையுந்து (லாரி);
நவீன எமன் வாகனம்.

மஞ்சள் விளக்கு மிளிர்ந்தது
இதயம் படபடப்பாய் பந்தயமிட்டது இன்ஜினோடு,
எந்தவாகனம் முந்திச்செல்லுமோ?.

குழந்தை சுகப்பிரசவமானது ஆட்டோவில்
மருத்துவர் அறிந்தால் வருத்தப்படுவார்;
ஆட்டோவிலிருந்தது “பிரசவத்திற்கு இலவசம்”.

ஊர்ப்பயணத்திற்கு மட்டுமல்ல வாகனம்,
மறுஉலகிற்கும் மெல்ல அழைத்துச் செல்லும்
உமிழும் புகை.

ஃஃஃ

நட்பு (ஹைகூ).

உன்னை நேசித்தது மனது
இருவர் வயதும் பொருந்தாத போதும்;
நட்பு.

சந்தித்து நாட்களாகிவிட்டது
வேறு வேறு திசைகளும் சென்றாகிவிட்டது
குறையாமலேயே இருக்கின்றது நட்பு.

குளம் வற்றிப் போனது,
வண்டலோடு ஒட்டிக்காய்ந்தது கருவாடுகள்;
மீனுக்கும் நீருக்குமான நட்பு.

நாணல் கரையைக் காத்தது
ஓடைநீர் நாணலை தழுவிச்சென்றது;
பரஸ்பர நட்பு.

எங்கும் வியாபித்திருந்தனர் என் உறவுகள்
உடன் பிறந்தோர் அதிகமில்லாத போதும்
நட்பின் வட்டம்.

ஃஃஃ

« Older entries