எந்நாளும் காதல் தினம்.

தென்றலின் நேசம்
பூவிடத்தில்
வான்நிலவின் நேசம்
இரவிடத்தில்
வானவில்லின் நேசம்
மழையிடத்தில்
என்நேசமோ உயிரே
உன்னிடத்தில்.

நிரம்பிய குளம் ஒருநாள்
வற்றிப்போகலாம்
நியமனங்கள் ஒருநாள்
மாற்றப்படலாம்
காதலுக்கான நியமனநாளும்
மாறிப்போகலாம்
தமிழ் வருடப்பிறப்பு
நாள் போல.

காதலுணர்வு நியமனமற்ற
இதயத்தின் கீதம்
காதல் இயற்கையானது
பகலும் இரவும்போல;
மனதில் கவலைமறந்து
நாளும் கழிப்போம்
மலரும் நாளனைத்தும்
காதலுக்கான நாளென்று.

ஃஃஃ

செல்ல சிணுங்கல்கள்…

தாமரைக்கண் விரித்து
ஓரக்கண்ணால் பார்த்து
பூவாய்ச் சிரிக்கின்றாய்…

முகம் கோணி
முறுவல் செய்து
சாடை பேசுகின்றாய்…

சில நேரம்
நா கடித்து
உன்கோபம் காட்டுகின்றாய்…

தென்றலாய் நெருங்குமுன்னை
தீண்ட நினைக்கையில்
புயலாய் ஒதுங்குகின்றாய்…

ஆண்டுகள் கடக்கின்றது…
உன்செல்ல சேட்டைகள்
குறையவே இல்லை…

இளமையோடு தொடரட்டும்
உன் செல்லச் சிணுங்கல்கள்
ஆண்டுகள் அறுபதை கடக்கும்போதும்…

ஃஃஃ