மழை நீர்(ஹைகூ)

சின்னச் சின்னக் குளங்கள்
சந்தோசமாய்க் குளிக்கும் சிட்டுக்குருவிகள்
சாலைக்குழிகளில் தேங்கும் மழைநீர்.

தூக்கம்கலைந்த சோகமான இரவுகள்
இனிமையாய் தரையில் ஜலதரங்கம் வாசித்தது,
பொத்தலில் வழிந்த மழைநீர்.

இயற்கையின் இன்னிசைக் கச்சேரி
இசையமைக்கக் கற்றுத்தந்தது யார்?…
குளத்தில் பட்டுத்தெரிக்கும் மழைநீர்.

வானம்பார்த்து ஏரோட்டும் கோடைகாலம்
நம்பிக்கையின் ஆசிர்வாதமாய் அமிர்தமாய் ருசித்தது
உதட்டில் விழுந்த ஒருதுளி மழைநீர்.

வழிமேல் விழிவைத்து காத்திருந்தது;
சிந்தும் துளிகளில் எந்தத்துளி முத்தாகுமோ?…
மழைநீரை எதிர்நோக்கும் சிப்பி.

ஃஃஃ

மழை நாளில்…

தூறல் விட்ட வானம்
துடைத்து வைத்த சிலேட்டாய்…
திரவம் தோய்ந்த உடலாய்
தரையெங்கும் செம்புலம் கலந்தநீர்.

வானம் ஓய்ந்த பின்னும்
வடியும் துளிகளோடு மரஇலைகள்;
வரண்ட பூமிக்கு சொட்டுச்சொட்டாய்
வதனம் குளிர வடிக்கும்நீர்.

நனைந்த உடலை உலர்த்த
நளினமாய் உடல்சிலிர்க்கும் காகம்;
நண்டுகள் சுறுசுறு குறுநடையிட்டு
நல்லதோர் வளை தேடும்.

மழைமுன் வெயில்காய்ந்த – எருமை
மாடுகள் சொற்கமென குட்டைபுகும்;
மத்தள ஓசையெழ தொளி
மண்ணில் புரண்டு ஆனந்திக்கும்.

எங்கிருந்தோ முளைத்திட்ட ஈசல்கள்
ஏகபோகமாய் பறந்து களிக்கும்
ஏங்கி சிறகுகள் உதிர்த்து
ஏதுமற்றதாய் மண்ணில் கிடக்கும்.

தூறலில் குளித்தெழுந்த காற்று
துவைத்து வைத்த வெண்துணியாய்
தூசுநீக்கி மண்ணின் மணம்சுமந்து
தூயவனாய் வருடிச் செல்லும்.

வடிந்தோடும் தெரு நீரை
வாவியாய் பாவித்து மகிழ்ந்து
வடிவாய்செய்த காகிதக் கப்பலை
வாண்டுகள் மிதக்கவிட்டு இரசிக்கும்.

ஓடையில் மலைவெள்ளம் வரவுநோக்கி
ஓடிவோடி கால்கள் சோர்ந்திருக்கும்
ஓடிவெள்ளம் வரும்போது – உற்றுப்பார்க்க
ஓய்தலின்றி கண்கள்மட்டும் பூத்திருக்கும்.

நனைந்து போன மண்சுவர்கள்
நமத்துப்போய் இப்போதா, எப்போது?
நிலம் பார்த்து வீழ்வதென்று
நாதியற்ற ஏழைபார்த்து கேட்கும்.

பொத்தல் ஓலைக் குடிசையில்
பாத்திரமேந்தி நீர்பிடித்த ஞாபகம்
பட்டணத்து தட்டுவீட்டு ஜன்னலோரம்
படுத்திருக்கும் மழைநாளில் வந்துபோகும்.

ஃஃஃ